சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்வி கற்றலுக்கு பசி இடையூறாக இருத்தல் கூடாது என்பதனை மனதில் கொண்டு அப்போதைய முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1.07.1982 அன்று சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் கல்வியுடன் ஊட்டச்சத்தையும் பெறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்கள், மதரசாக்கள் மற்றும் மக்தப்களில் பயிலும் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சூடான மதிய உணவு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள்
- ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், இடைநிற்றலை குறைத்திடுதல் மற்றும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி வழங்கிடுதல்.
- ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்குவதன் மூலம் ஊட்டச்சத்து அளித்தல்.
- ஏழ்மையில் உள்ள பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளை ஊக்கப்படுத்தி தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியவைத்தல், முறையான கல்வி அளித்தல்.
- வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய வழி வகுத்தல்.
சத்துணவுத் திட்டத்தின் வளர்ச்சி நிலைகள்
சத்துணவுத் திட்டம், 1.07.1982 அன்று 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 வயது முதல் 9 வயதிற்குட்பட்ட ஆரம்பப்பள்ளி பயிலும் குழந்தைகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் துவக்கப்பட்டது. பின்னர் 15.09.1982 அன்று நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டதோடு, 15.09.1984 ஆம் ஆண்டு 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் பயனடையும் வகையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- 5 முதல் 9 வயதிற்குட்பட்ட துவக்கப்பள்ளி குழந்தைகள் மற்றும் 10 முதல் 15 வயது வரையிலான உயர் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், வாரத்திற்கு 5 நாட்கள் வீதம் ஆண்டிற்கு 210 நாட்கள், பள்ளியிலேயே சூடாக சமைத்த ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 18 தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சூடாக சமைத்த ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதம் வருடத்தில் 312 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை துவக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, நாளொன்றுக்கு 100 கிராமும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை உயர் துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு 150 கிராம் அரிசியும் வழங்கப்படுகிறது.
கலவை சாதம்
2013 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தில், பல்வகை கலவை சாதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 15.8.2014 முதல் மாநிலத்திலுள்ள அனைத்து சத்துணவு மையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவு பணியாளர்களுக்கு சுகாதாரமான சமையல் முறைகள் பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பல்வகை கலவை சாத உணவு வகைகள் பின்வருமாறு:-
முட்டை வழங்குதல்
அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு சூடாக சமைத்த ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதத்துடன், குறைந்தபட்சம் 46 கிராம் எடையுள்ள ஒரு முட்டை வழங்கப்படுகிறது. அதன் மூலம் 6.12 கிராம் புரதமும் 80 கிலோ கலோரி சக்தியும் கிடைக்கின்றன.
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளி சட்டம், 1998 மற்றும் விதிகள், 2000 ஐ பின்பற்றி மாநில அளவில் அக்மார்க் ‘ஹ’ குறியீடு உடைய நடுத்தர முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தரமான முட்டைகள் வழங்குதலை கண்காணிக்க, உணவுத் தரம் வாய்ந்த வண்ணங்களைக் கொண்டு முட்டைகளின் மேல் முத்திரை பதிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
பயறு வகைகள் – கொண்டைக் கடலை / பாசிப் பயறு
மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு குழந்தைக்கும், 20 கிராம் ‘கருப்பு கொண்டைக் கடலை’, கொண்டைக் கடலை புலவாக வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு 72 கிலோ கலோரி சக்தியும், 3.42 கிராம் புரதமும் கிடைக்கின்றன.
மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வியாழக் கிழமைகளில் ஒவ்வொரு குழந்தைக்கும், 20 கிராம் ‘பச்சைப் பயறு சுண்டல்’ வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு 67 கிலோ கலோரி சக்தியும், 4.80 கிராம் புரதமும் கிடைக்கின்றன.
உருளைக் கிழங்கு
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் குழந்தைகளுக்கு மாவு சத்தின் (கார்போஹைட்ரேட்) அளவினை அதிகரிக்கும் வகையில், 20 கிராம் உருளைக் கிழங்கு மிளகாய்பொடி தூவி வறுத்து வழங்கப்படுவதால் 19.04 கிலோ கலோரி சக்தியும், 0.32 கிராம் புரதமும் கிடைக்கின்றன.
வாழைப்பழம்
முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. 100கிராம் எடையுள்ள வாழைப்பழத்தின் மூலம் 116 கிலோ கலோரி சக்தியும், 1.2 கிராம் புரதமும் கிடைக்கின்றன. 806 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு மற்றும் சமையல் எண்ணெய்
சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு மற்றும் சமையல் எண்ணெய் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படுகின்றன. சமையல் எண்ணெயில் வைட்டமின் ‘A’ மற்றும் வைட்டமின் ‘D’ உயிர் சத்துக்கள் சேர்த்து செறிவூட்டப்படுவது வைட்டமின் ‘A’ மற்றும் ‘D’ குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. அயோடின் மற்றும் இரும்பு சேர்த்து செறிவூட்டப்பட்ட உப்பு முன்கழுத்துக் கழலை, இரத்த சோகை ஆகியவற்றைத் தடுக்கிறது.
வகுப்பு | மையங்களின் எண்ணிக்கை | மாணவர்கள் எண்ணிக்கை |
---|---|---|
தொடக்கப்பள்ளி (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) |
367 | 33311 |
உயர் தொடக்கப் பள்ளி (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) |
254 | 22191 |
9 மற்றும் 10 ஆம் வகுப்பு | 7475 | |
தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை | 18 | 447 |
மொத்தம் | 639 | 63424 |
கொரோன நோய் தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவது.
கொரோன நோய் தொற்றுக் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மார்ச் 2020ம் மாதம் முதல் தற்போது வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மே-2020ம் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும் வரை கீழ்கண்ட அளவுகளில் உலர் உணவுப் பொருட்கள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
பொருள் | அளவு | வழங்கப்பட்டு வரும் மாதம் |
---|---|---|
அரிசி | 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்ளின்படி ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 100கிராம் வழங்கப்படுகிறது 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்ளின்படி ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 150கிராம் வழங்கப்படுகிறது |
மே-2020 மாதம் முதல் தற்போது வரை |
பருப்பு | 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்ளின்படி ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 40 கிராம் வழங்கப்படுகிறது
6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்ளின்படி ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு 56கிராம் வழங்கப்படுகிறது |
மே-2020 மாதம் முதல் தற்போது வரை |
முட்டை | 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஒரு மாணவருக்கு மாதம் 10 முட்டைகள் வழங்கப்படுகிறது | செப்டம்பர்-2020 மாதம் முதல் தற்போது வரை |
சத்துணவு பணியாளர்களின் பணி விவரம்
- ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய மூன்று பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் பயனாளிகளின் எண்ணிக்கை 500க்கும் மேல் இருந்தால் கூடுதலாக ஒரு சமையல் உதவியாளரை நியமனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- பெண்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்படுகின்றனர்.
- விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சிறப்பு பிரிவினர்களுக்கு சத்துணவு பணியிடங்களில் 25 சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாற்றுத் திறனாளிகளுக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களில் 4 சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
’’பகுதி நேர நிரந்தரப் பணியாளர்கள்’’ என வகைப்படுத்தப்பட்ட சத்துணவுப் பணியாளர்களின் வேலை நேரம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஆகும்.
சத்துணவுப் பணியாளர்களுக்கு சிறப்பு மாதாந்திர ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகை, பண்டிகை முன்பணம், பொங்கல் போனஸ், மலைவாழ் படி மற்றும் குளிர்கால படி, சிறப்பு சேம நல நிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், கூடுதல் பொறுப்புப்படி, குடும்ப நல நிதி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, மகப்பேறு விடுப்பு, விருப்ப ஓய்வு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகிய கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
திட்டத்தின் விளைவு
இத்திட்டத்தின் செயலாக்கத்தினால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தல், மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை குறைத்தல், முறையாக பள்ளிக்கு வருகை தருவதை உறுதி செய்தல் ஆகிய நேர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இத்திட்டம் பெண் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், குழந்தைகளது ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்திடவும் வழிவகை செய்கிறது.
உணவுபொருள் மேலாண்மை
பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அந்தந்த சத்துணவு மையங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களுக்கு தங்குதடையின்றி மதிய உணவு வழங்க 45 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் இருப்பில் வைத்திருக்கப்படும்.
நிதி மேலாண்மை
பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் உணவு சமைக்க தேவைப்படும் காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள் வாங்க சத்துணவு அமைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான முன்பணம் அந்தந்த பள்ளி சத்துணவு மைய வங்கி சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். 2019ம் ஆண்டு முதல் தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.2.28 மற்றும் உயர் தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.2.28 வீதம் செலவினம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
வைப்பறையுடன் கூடிய சமையலறை
வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டுவதற்கான மதிப்பீடு, மாநில அரசால் நிர்ணயம் செய்யப்படும் பரப்பளவு மற்றும் கட்டுமான செலவினத்தினை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. 100 குழந்தைகள் பயின்று வரும் பள்ளிகளுக்கு 20 சதுர மீட்டரும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு 100 கூடுதல் குழந்தைகளுக்கும், கூடுதலாக 4 சதுர மீட்டர் பரப்பளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 60:40 விகிதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
சத்துணவு மையங்களை நவீனமயமாக்குதல்
சத்துணவு மையங்களை நவீன மயமாக்கி புகையில்லா சுற்றுச்சூழல் உருவாக்க நவீன எரிவாயு இணைப்புகள் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளன. மையம் ஒன்றுக்கு எரிவாயு இணைப்பிற்காக `22,350 வீதம் சமையல் மேடை கட்டுமானத்திற்கும், எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்பு பெறுவதற்கும் (பாதுகாப்பு வால்வு உள்ளிட்டவை) வழங்கப்பட்டுள்ளன. எரிவாயு அடுப்புகளை கையாளுவது குறித்த பயிற்சிகள் அந்தந்த எரிவாயு முகவர்கள் மூலம் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சமையல் உபகரணங்கள்
சமையல் இலகுவாக செய்திட அரசால் பிரஷர் குக்கர்கள் சத்துணவு மையங்களுக்கு வாங்கி வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சத்துணவு மையங்களுக்கும் தேவையான சமையல் உபகரணங்களான மூடியுடன் கூடிய சமையல் பாத்திரம், கரண்டி மற்றும் இன்டோலியம் கடாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதற்காக மையத்திற்கு `5,000 வீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேசிய மதிய உணவுத் திட்டம்
- 1995ம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் மத்திய அரசால் ஆரம்பக் கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம் தொடங்கப்பட்டது. 1997-1998ஆம் ஆண்டு, நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அக்டோபர் 2007 ஆம் ஆண்டு, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஆரம்பக்கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம் என்ற பெயர், பள்ளிகளில் “தேசிய மதிய உணவுத் திட்டம்” என மாற்றம் செய்யப்பட்டது.
- இத்திட்டத்தை செயல்படுத்திட, மத்திய மற்றும் மாநில அரசின் பங்காக 60 : 40 என்ற விகிதாசாரத்தில் நிதி அளிக்கப்படுகிறது. அரிசி, அதற்கான போக்குவரத்து செலவினம் மற்றும் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு இனங்களுக்கான செலவினம் ஆகியவற்றை முழுவதுமாக மத்திய அரசு ஏற்கிறது.
- மதிய உணவில் துவக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு 450 கிலோ கலோரியுடன் 12 கிராம் புரதச்சத்தும், உயர்துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு 700 கிலோ கலோரியுடன் 20 கிராம் புரதச்சத்தும் இருக்க வேண்டும் என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு 553.30 கிலோ கலோரிகளும், 18.12 கிராம் புரதமும், உயர்துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு 733.86 கிலோ கலோரிகளும், 21.64 கிராம் புரதமும் கொண்ட மதிய உணவினை வழங்கி வருகிறது.
- 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு மெட்ரிக்டன் அரிசி `3,000 வீதமும் அதற்கான போக்குவரத்து செலவினமாக `750ம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
- இத்திட்டத்தின் கீழ் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு பயனாளிக்கும் தினசரி உணவூட்டுச் செலவினம் `4.13 எனவும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு `6.18 எனவும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது (பணியாளர் ஊதியம் மற்றும் நிர்வாக செலவினம் நீங்கலாக). இருப்பினும் மாநில அரசு தனது பங்களிப்பான 40 சதவிகிதத்தை விட கூடுதலாக செலவினம் மேற்கொள்கிறது.
வகுப்பு | மதிய உணவு விதிமுறைகள் (60:40) | மத்திய அரசு (60…) | மாநில அரசு (40…) | மாநில அரசின் கூடுதல் பங்கு | மொத்தம் |
---|---|---|---|---|---|
தொடக்கப்பள்ளி (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) |
4.13 | 2.48 | 1.65 | 2.98 | 7.11 |
உயர் தொடக்கப் பள்ளி (6 முதல் 8 ஆம் வகுப்பு வரை) |
6.18 | 3.71 | 2.47 | 1.03 | 7.21 |
9 மற்றும் 10 ஆம் வகுப்பு | 100 விழுக்காடு மாநில அரசின் பங்களிப்பு | 8.78 |
பயிற்சித் திட்டம்
ஊட்டச்சத்து, சுகாதாரம், தன் சுத்தம், உணவுப் பொருட்களை பாதுகாப்பது மற்றும் சமையலறை கழிவுகளை அகற்றுவது குறித்த பயிற்சிகள் சத்துணவு பணியாளர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. கலவை உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி பிரபல சமையல்கலை நிபுணர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி சுகாதார திட்டம்
சுகாதாரத் துறையின் மூலம் பள்ளிக் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை மையமாக கொண்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பள்ளி சுகாதார திட்டத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன:-
- இரத்தசோகை, பொது சுகாதாரம் மற்றும் இதர சுகாதார பிரச்சனைகளை பரிசோதித்தல் – சுகாதார பராமரிப்பு மற்றும் தொடர் சிகிச்சைக்கான பரிந்துரை
- நோய் எதிர்ப்பு, கண் மற்றும் பல் பரிசோதனை
- இரும்பு சத்துடன் கூடிய போலிக் அமில மாத்திரைகள் வழங்குதல்
- குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குதல்
- அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார அட்டைகளைப் பராமரித்தல்.
மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
மதிய உணவு திட்டத்தினை செயல்படுத்த மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்பு அலுவலர் | கைபேசி எண் | அலுவலக தொலைபேசி எண் | மின்னஞ்சல் முகவரி |
---|---|---|---|
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) மாவட்ட ஆட்சியரகம், காஞ்சிபுரம் மாவட்டம். |
7402606004 | 044-27237695 | panoon.tnkpm@nic.in |
ஊராட்சி ஒன்றியம் / நகராட்சியின் பெயர் | தொடர்பு அலுவலர் | கைபேசி எண் | அலுவலக தொலைபேசி எண் | தொடர்பு அலுவலர் | கைபேசி எண் |
---|---|---|---|---|---|
காஞ்சிபுரம் | வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) | 7402606019 | 044-27277620 | துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) | 7402902102 |
வாலாஜாபாத் | வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) | 7402606022 | 044-27256031 | துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) | 7402902118 |
உத்திரமேரூர் | வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) | 7402606028 | 044-27272233 | துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) | 7402902137 |
குன்றத்தூர் | வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) | 7402606038 | 044-27174152 | துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) | 7402902175 |
திருப்பெரும்புதூர் | வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) | 7402606033 | 044-27162757 | துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) | 7402902157 |
காஞ்சிபுரம் நகராட்சி | நகராட்சி ஆணையர் | 7397372823 | 044-27222801 | நகராட்சி மேலாளர் | – |
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
சத்துணவு பிரிவு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
காஞ்சிபுரம் – 631501.
அலுவலக தொலைபேசி எண் : 044-27237695
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கைபேசி எண் : 7402606004
அலுவலக மின்னஞ்சல் முகவரி : panoon.tnkpm@nic.in