மூடு

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை

 

முன்னுரை

வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும்போது மன்னர்கள் காலத்திலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு, வேளாண்மை, நில அளவுகள் வரிவிதிப்பு மற்றும் வறட்சிகளின்  மதிப்பீட்டிற்கு புள்ளி விவரம் சேகரிக்கும் முறைகள் இருந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வரிவருவாய்களை வசூலிக்க புள்ளி விவரங்கள் சேகரித்தல் மிக முக்கியமான பணியாக இருந்துள்ளது.

தொடக்கம்

1922 ஆம் ஆண்டு புள்ளியியல் பிரிவு ஏற்படுத்தப்பட்ட காலத்தில் வேளாண் புள்ளி விவரம், வாராந்திர சில்லறை விலை மற்றும் பருவ கால அறிக்கை என ஒரு சில திட்டமிட்டப் பணிகளை மட்டுமே சேகரிக்க தொடங்கியது. பின்னர் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இன்றியமையாத பொருட்களின் உற்பத்தி, போக்குவரத்து, (Stock) இருப்பு, விலைவாசி மற்றும் உணவுப்  பற்றாக்குறை பற்றிய விவரங்கள் சேகரிக்கும் திட்டங்களிலும் ஈடுபட ஆரம்பித்தது.

ஐந்தாண்டு திட்டப்  பணிகள் தொடர்பாகவும், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பணிகளுக்காகவும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணிகளிலும் பங்கேற்றது.

மேலும் பெரும் அளவிலான கணக்கெடுப்பு பணிகளான வேளாண்மை மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு பணிகளில் முழுமையாக  ஈடுபட்டு வருகின்றது.

அரசில் உள்ள ஒவ்வொரு துறையும் தங்களின் திட்டமிடுதலுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கொள்கைகளை உருவாக்கும் திட்டக்  குழுவிற்கு புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து புள்ளியில் துறை அளித்து வருகிறது.

மாநில அரசில் இத்துறையின் பங்கு

1.பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மாநிலத்தின் தலைமை புள்ளியியல் முகமையாக செயல்பட்டு வருதல் (SASA- State Agriculture Statistical Agency)

2.மாநில முழுவதிலும் புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும்    தொகுப்பதிலும் மற்றும் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபடுதல்

3.வேளாண்மை, தொழில் மற்றும் விலைவாசி ஆகிய பிரிவுகளில் விவரங்களை சேகரித்து அவற்றை அறிக்கைகளாக வெளியிடுவதும் (Publications)

4.புள்ளி விவரங்கள் குறித்த செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முதன்மையான அமைப்பாகவும் இத்துறை மாநில அரசில் பங்காற்றி வருகின்றது.

புள்ளியியல் துறையின்  அமைப்பு

தமிழகத்தில் புள்ளியியல் துறையானது 1953ஆம் ஆண்டில்தான் ஏற்படுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களில் சுதந்திரத்திற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட  இத்துறை தமிழ்நாட்டில் மொழிவாரி மாகாணமாக தமிழ்நாடு என மாநிலம் உருவான போது தான் இத்துறையும் உருவாக்கப்பட்டது.

இதன் முதல் இயக்குநராக  திரு.என்.கே.அத்யந்தைதா என்பவரைக் கொண்டு தமிழகத்தில் செயல்பட தொடங்கியது.

தென்னாற்காடு மாவட்டத்தில் முதன் முதலில் 1953ல் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் அமைக்கப்பட்டது. பின்னர் 1956-57ல் அணைத்து மாவட்டங்களிலும், 1964-65ல் வட்ட அளவிலும், 01.09.1981 முதல் வட்டார அளவிலான புள்ளியியல் அலுவலகங்கள் செயல்பட ஆரம்பித்தன.

தலைமை செயலகத்தில் வேளாண்மைத்துறை, மீன்வளம்  மற்றும் வனத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை தற்போது 1988 முதல் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கீழ் 08.02.1996 முதல் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை என்ற பெயருடன் செயல்பட்டு வருகின்றது.

மாநில அளவில் ஆணையர் / இயக்குநர் இத்துறையின் தலைவராக உள்ளார். இவருக்கு இத்துறையின் திட்டம் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு உதவும் வகையில் மூன்று கூடுதல் இயக்குநர்கள் செயல்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

மண்டல அளவில்

2013ல் இத்துறையானது நிர்வாக நடைமுறைக்காக 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் புள்ளியியல் இணை இயக்குநரின் மேற்பார்வையில் 5 மாவட்டங்களை உள்ளடக்கியது.

மாவட்ட அளவில்

இத்துறையானது புள்ளியியல் துணை இயக்குநரின் தலைமையிலும் திட்டம் மற்றும் நிர்வாகப் பணிகளில் உதவுவதற்காக 3 புள்ளியியல் அலுவர்களும், புள்ளியியல் ஆய்வாளர்கள், புள்ளியியல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றது.

கோட்ட  அளவில்

ஒவ்வொரு வருவாய் கோட்டத்திற்கும் புள்ளியியல் உதவி இயக்குநர் தலைமையிலும் திட்டம் சார்ந்த பணிகளில் உதவிட புள்ளியியல் ஆய்வாளர் பதவியுடன் செயல்பட்டு வருகின்றது.

வட்ட அளவில்

1964 முதல் 1981 வரை புள்ளியியல் ஆய்வாளர் தலைமையில் செயல்பட்டு வந்த அலுவலகம் 01.09.1981 முதல் நுண்ணிய அளவில் (Micro level) சேகரிக்கப்படும் புள்ளி விவரத்தின் முக்கியத்துவத்தைக் கருதி ஒவ்வொரு வட்டார அளவில் திட்டப்பணிகளை மேற்கொள்ள வட்டாரப்  புள்ளியியல் ஆய்வாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இத்துறையினால் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் மற்றும் பணிகள்

1.தேசிய மாதிரி ஆய்வு திட்டம்NSS

தேசிய அளவில்  முக்கியமாக அமைப்புசாரா (NGO) பிரிவுகளில் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து நடத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த கணக்கெடுப்பாகும்.

இந்த கணக்கெடுப்பானது ஆறு மாதம் அல்லது ஒரு வருட காலத்தில் முழுநேரப் பணியாளர்களை களப்பணியாளர்களாகக் கொண்டு நடத்தப்படுகிறது. மக்களுடைய சமூக பொருளாதார இனங்களின் மீதான அடிப்படை விவரங்களை சேகரித்து பல்வேறு நலக்கொள்கைகளை
திட்டமிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது

2.வீட்டு வசதி புள்ளி விவரம்Housing Scheme

தேசிய அளவில் வீட்டு வசதி கொள்கை மற்றும் வீடு வசதி திட்டம் தொடர்பான (Documents) ஆவணங்களை ஏற்படுத்துவதற்கான பொது மற்றும் தனியார் துறைகளின் கட்டிட விவரங்களை ஆண்டுதோறும் சேகரிக்கும் திட்டமாகும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் IAY, PMAY மற்றும் பசுமை வீடு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

3.கட்டிட கட்டுமான செலவு குறியீட்டெண்

கட்டிட பொருட்கள் மற்றும் கட்டுமானப்  பணியாளர்களின் ஊதிய விகிதங்களை காலாண்டிற்கு ஒரு முறை சேகரித்து 16 மையங்களுக்கான கட்டிட கட்டுமான செலவு குறியீட்டெண் தொகுக்கப்படுகிறது.

கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு இந்த குறியீட்டெண் மிக்க பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

 

4.மொத்த விலைக்  குறியீட்டெண்Wholesale Price Index (WPI)

வேளாண்மை மற்றும் தொழிற் சார்ந்த பொருட்களுக்கான மொத்த   விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கான மொத்த   விலை குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது.

5.உற்பத்தி குறியீட்டெண்Index of Industrial Production (IIP)

தொழிற் சார்ந்த பொருட்கள் ஓவ்வொரு மாதமும் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை சேகரித்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டில் உற்பத்தி குறியீட்டெண் கணக்கிடப்பட்டு ரிசர்வ் வங்கி முதல் 21 வகையான அமைப்புகள் மதிப்பீடு செய்வதற்கு பயன் படுத்துகின்றன.

6.குழுக் காப்பீட்டுத்  திட்டம்

ஒவ்வொர் ஆண்டும் குழுக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்கள்களின் விவரங்களை உள்ளாட்சி, சத்துணவு திட்டம், உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிநுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டு தொகுத்து மாநிலத்தில் குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதவி வாரியாக பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை கருவூலத் துறைக்கும் மற்றும் மாநில அரசிற்கும் அனுப்பப்படுகிறது.

7.வட்டார, மாவட்ட, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாநில புள்ளியியல் கையேட்டினை வெளியிடுதல்

தமிழ்நாட்டில் உள்ள வட்டாரம், நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவிலான விவரங்களை இத்துறையால் சேகரிக்கப்பட்டு தொகுத்து ஆண்டுதோறும் மாநில புள்ளியியல் கையேடு வெளியீடு பிரிவினால் வெளியிடப்படுகிறது.

பொருளாதார வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக மக்கள்தொகை, விவசாயம், தொழில், சுகாதாரம், கல்வி, மின்சாரம், விலைவாசி மற்றும் வர்த்தக விவரங்களும் சேகரித்து தொகுத்து வழங்கப்படுகிறது.

8.ஆண்டு தொழில் ஆய்வு

மாநில வருவாய் மதிப்பீட்டிற்காகவும், மாநிலத்தில் பதிவு செய்யப்பட தொழிற்சாலைகளின் முதலீடு, கடன், தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் உற்பத்தி போன்றவைகளை தனியார் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து தணிக்கை செய்யப்பட ஆண்டறிக்கைகள் பெறப்பட்டு தொகுக்கப்படுகிறது.

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தியை கண்டறியவும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆராயவும் இத்திட்டம் பயன்படுகிறது.

9.மாநில வருவாய் மதிப்பீடு

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியை  திட்டமிட ஏதுவாக 17 இனங்களுக்கான மொத்த மாநில உற்பத்தி, நிகர மாநில உற்பத்தி  மற்றும் தனி நபர் வருமானங்களை (GNP, NNPS & PI) மதிப்பீடு செய்யப்படுகிறது.

10.மாநில கணக்கு

மாநில கணக்கு விவரங்கள் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கைகளை பெற்று பொருளாதார அடிப்படையில் வகைப்பாடுகள் மேற்கொண்டு (Classification) உற்பத்தி, நுகர்வு மற்றும் மூலதன ஆக்கம் ஆகியவற்றின் விவரங்களைக் கொண்டு அதன் பொருளாதார நடவடிக்கைகள் தொகுக்கப்படுகின்றன.

11.மூலதன ஆக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிர்வாகத் துறைகள் அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட வாரியங்கள் உள்ளாட்சி நிறுவனங்கள் முதலிய மாநில பொதுத் துறைப் பிரிவு மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் நிலையான மூலதன ஆக்க மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன.

12.அங்காடிப் புலனாய்வு மற்றும் விலைவாசி

இத்திட்டத்தில் அங்காடியில் நிலவும் விலைகள், வரத்து, அனுப்புகை, இருப்பு மற்றும் உற்பத்தி அங்காடியின் விலை நிலவரம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள 96 மையங்களில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் விவரங்கள் மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பப்படுவதன் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. மற்றும் மாநிலத்தில் நிலவும் விலை நிலவரப் போக்கு கண்டறியப்படுகிறது.

13.வேளாண்மை சார்ந்த திட்டங்கள்

நில உபயோகம், பாசன ஆதாரங்கள், நீர்ப்  பாய்ச்சப்பட்ட மற்றும் நீர் பாய்ச்சப்படாத பயிர் பரப்பு, உற்பத்தி மதிப்பீடு, ஒவ்வொரு  மாவட்டத்திலும் உணவு மற்றும் உணவல்லாத பயிர்களின் உற்பத்தி விகிதாச்சரத்தை கணக்கிடுதல், அத்துடன் மழை விவரங்கள், வேளாண்மை பொருட்களின் விலைவாசி நிலவரம், விவசாய கூலி விவரங்கள், பண்ணை விலை விவரங்கள் மற்றும் வேளாண்மை குறியீட்டெண் போன்றவைகளை உள்ளடக்கியது.

13.1 பயிர் முன் மதிப்பீட்டறிக்கை

ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர் பரப்பு விவரங்களை ஒருங்கினணத்து பருவ வாரியாக ஆண்டு இறுதியில் கணக்கிடுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் உள்ள 56 முக்கிய உணவு, உணவல்லாத மற்றும் பணப்பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி விவரங்கள் முன்கூட்டியே மதிப்பீடு (Advance Estimate)  செய்யபப்டுகின்றன.

முன்கூட்டியே பயிர் பரப்பு விவரங்களை மதிப்பீடு செய்வதால் உற்பத்தி விவரங்களை கொண்டு உற்பத்திதிறன் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் வேளாண் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

13.2 உணவு மற்றும் உணவல்லாத பயிர்களின் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம்

கிராமம், குறுவட்டம், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு பயிர்களின் பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொண்டு மிக நுட்பமான அளவில் ஹெக்டேருக்குண்டான சராசரி விளைச்சல் விகிதத்தை கணக்கிட்டு மொத்த உணவு தானிய உற்பத்தி பற்றி மதிப்பீடு செய்யப்படுகிறது. உணவு தானிய உற்பத்தி மற்றும் இருப்புப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கொள்கைகள் வகுப்பதற்கு இத்திட்டம் பயன்படுகிறது.

13.3 பயிர் காப்பீட்டுத் திட்டம்

இயற்கை சீற்றத்தால் ஏற்படும் வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் பூச்சி தாக்குதல், விதை முளைக்காமை போன்றவற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் மற்றும் பண இழப்பை காப்பீடு திட்டத்தின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது.

கிராம அளவில் அதிகஅளவில் பயிரிடப்படும் பயிர்களின் சராசரி விளைச்சல் விகிதம் இத்துறையின் நேரடி பயிர் அறுவடை மேற்பார்வையில் பரிசோதனை மேற்கொண்டு கணக்கிடப்படுகிறது.

இத்திட்டம் இயற்கையின் சூதாட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டினை ஈடுசெய்ய பயன்படுகிறது.

13.4 தென்னை மற்றும் கமுகு ஆய்வு

வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தென்னை மற்றும் கமுகு திட்டம் ஆய்வு மேற்கொண்டு பயிர்களின் பரப்பு விவரங்கள், விளைச்சல் விகிதம் மற்றும் உற்பத்தி விவரங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

புயல், சூறாவளி மற்றும் வறட்சி காலங்களில் தென்னை மற்றும் கமுகு மரங்கள் பாதிக்கப்படும்போது சராசரி விளைச்சலினை அடிப்படையாக கொண்டு இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

13.5 பழம், காய்கறி மற்றும் சிறுபான்மை பயிர்களில் பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம் செயல்படுத்துதல்

பழம் மற்றும் காய்கறி பயிர்களின் ஒரு ஹெக்டர் விளைச்சல் விவரத்தை பயிர் அறுவடை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அதன்மூலம் உற்பத்தி மற்றும் விளைச்சல் விகிதம் வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் மிக நுட்பமாக கணக்கிடப்படுகிறது.

இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிப்படையும் போது சராசரி விளைச்சலினை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு தொகை மாநில அரசால் நிர்ணயிக்க பயன்படுகிறது.

13.6 விவசாய கூலி குறியீட்டெண்

வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் தினசரி/ மாதாந்திர/வருடாந்திர அடிப்படையில் வழங்கப்பட்ட விவசாய கூலி விவரங்களை கொண்டு விவசாய கூலி விவர குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தினை திருத்தியமைக்கவும் விவசாய துறையில் ஈடுபடும் தொழிலார்களுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கவும் இந்த குறியீட்டெண் பயன்படுகிறது.

13.7 நீர்ப்பாசன கையேடு

மாவட்ட வாரியாக வட்டார அளவில் பயிர் சாகுபடி முறை மற்றும் பாசன ஆதாரங்கள் (தனியார் மற்றும் அரசு) மூலம் சாகுபடி செய்யப்பட மொத்தப் பரப்பு மற்றும் நிகர பரப்பு மற்றும் ஒரு தடவைக்குமேல் சாகுபடி செய்யப்பட பரப்பு போன்ற விவரங்களை நீர்ப்பாசன ஆதாரங்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம் அடிப்படையில் கணக்கிடப்பட்டு மாவட்ட நீர்ப்பாசன கையேடு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

13.8 மழைப்  புள்ளி விவரங்கள் சேகரித்தல்

மாவட்டத்தில் உள்ள மழைப் புள்ளி விவர மையங்களிலிருந்து தினசரி மற்றும் மாதாந்திர மழைப் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இத்துறையினால் மாநில அளவில் பெய்த மழையளவினை கொண்டு பருவ கால அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. இந்த மழைப் புள்ளி விவரத்தினை மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள தகவல்களாக உள்ளது.

13.9 பயிர் பரப்பு உரிய காலத்தில் மதிப்பீட்டாய்வு திட்டம் (TRS)

ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் நில உபயோக புள்ளி விவரங்கள் கணக்கெடுத்தல் மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் 9 முக்கிய பயிர்களில் நீர்பாய்ச்சப்பட்ட மற்றும் நீர்பாய்ச்சப்படாத பரப்பில் உயர்ரகம் மற்றும் உள்ளூர் ரகம் வாரியாக பயிர் பரப்பு முன்கூட்டி மதிப்பீடு செய்யப்படுகிறது.

13.10 பயிர் மேம்பாட்டுத் திட்டம்  I.C.S

A.மாநிலத்தில் கிராம அளவில் உள்ள அடிப்படை களப்பணியாளர்களாகிய கிராம நிர்வாக அலுவலர்களால் மாதந்தோறும் சேகரிக்கப்படும் வேளாண்மை புள்ளி விவரங்களில் காணப்படும் குறைபாடுகளை முறையாக ஆய்வு செய்து அவற்றை நிவர்த்தி செய்யப்படுகிறது.

B.மேலும் முக்கிய உணவு மற்றும் உணவல்லாத பயிர்களுக்கான விளைச்சல் மதிப்பீடுகளை கணிக்க அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் அறுவடைப் பணிகளை ஆய்வு செய்தல்.

C.ஆண்டு முடிவில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜமாபந்தியின் போது ஜமாபந்தி அலுவலர்களுக்கு 1 1A  மற்றும் 2 எண்  கணக்கு அடங்கல் பதிவேடுகளை சமர்ப்பிக்கும் போது  ஏற்படும் குறைபாடுகளை களைந்து அவற்றையும் சரி செய்வது.

14.கணக்கெடுப்புகள்

14.a .வேளாண்மை கணக்கெடுப்பு

வேளாண்மை கொள்கைகள் மத்திய அரசினால் திட்டமிடுவதற்கு ஏதுவாக 5 ஆண்டுகளுக்கு  ஒரு முறை மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலிருந்தும் கிராம நிர்வாக அலுவலர்களை களப்பணியாளர்களாக கொண்டு புள்ளியியல் துறையினால் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் அடங்கல் தொடர்பான உரிய நிலப் பதிவேடுகளிலிருந்து கைப்பற்றுதாரர், கைப்பற்றுதாரரின் அளவு, தன்மை மற்றும் உரிமம் பற்றிய விவரங்கள் மறு அட்டவணைப் படுத்தப்பட்டு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் தொகுக்கப்படுகிறது. மேலும் கைப்பற்றுதாரரின் சமூக பாகுபாடு விவரங்களும் இக்கணக்கெடுப்பில் சேகரிக்கப்படுகின்றது.

இந்த கணக்கெடுப்பின் மூலம் மாநிலம், மாவட்ட மற்றும் வட்டாரத்தில் உள்ள குறு, சிறு மற்றும் பெரிய கைப்பற்றுதாரர்களின் எண்ணிக்கை, பாசன முறை அடிப்படையில் எவ்வளவு மற்றும் எத்தனை பயிர்கள் பயிரிடப்படுகின்றன என்ற விவரத்தினையும் மற்றும் வேளாண்மைக்கு விவசாயிகள் எந்த வகையான இடுபொருள்கள் பயன்படுத்துகின்றனர் போன்ற விவரங்களையும் வேளாண்மை கணக்கெடுப்பின் மூலம் அறியலாம்.

தமிழ்நாட்டில் இதுவரை 10 வேளாண்மை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. பசலி 1430 (2020-21) ஆம் ஆண்டினை வேளாண்மை கணக்கெடுப்பின் அடிப்படை ஆண்டாக கொண்டு 2021-22ஆம் ஆண்டில் 11வது  வேளாண்மை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

14.b.பொருளாதார கணக்கெடுப்பு

மத்திய அரசானது பொருளாதார கொள்கைகளை வகுப்பதற்கு ஏதுவாக பதிவு மற்றும் பதிவு செய்யப்படாத தனிப்பட்ட மற்றும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேளாண்மை அல்லாத அனைத்து  தொழில் / வர்த்தக நிறுவனங்களையும் கணக்கெடுக்கும் பணியே பொருளாதாரா கணக்கெடுப்பாகும்.

ஐந்து  ஆண்டுக்கொருமுறை மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பில் வீட்டிலிருந்தே செய்யப்படும் சுய தொழில்கள், வணிக நிறுவனங்களின் கிராமப்புற மற்றும் நகர்புறத்தில் உள்ளவைகளின் எண்ணிக்கை, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊதியமில்லா மற்றும் ஊதியத்துடன் பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை, தனிநபர்கள். கூட்டாண்மை, கூட்டுறவு மற்றும் சங்கங்கள் போன்ற அமைப்புகளினால் செயல்படுத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவன செயல்பாட்டிற்கான மூலதனம் எவ்வாறு திரட்டப்படுகின்றது என்ற பல்வேறு விவரங்களை இக்கணக்கெடுப்பின் மூலம் அறியலாம்.

தமிழ்நாட்டில் இதுவரை 6 பொருளாதார கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. 2019-20ஆம் ஆண்டுகளில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு முதன்முறையாக பொது சேவை மையம் (CSC) மூலமாக கைப்பேசி பயன்பாடுகள் (Mobile App) வழியாக நடைபெற்றுள்ளன.